சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு


குழந்தைகளைத் துயில வைப்பது அவ்வளவு எளிமையான காரியம் அல்ல! அழும் குழந்தைகளை தன் மடியிலோ மார்பிலோ தோளிலோ வைத்து தாலாட்டுவதும் அதனை அழாமல் இருக்க தாலட்டுப் பாடலை இசைப்பதும் நம் தமிழர்களின் தொன்று தொட்ட வழமை!.
குழந்தையை 'அம்மா' என விளித்து சாய்ந்தாடச் சொல்வது சிறிய குழந்தைகளைக் கூட மதிக்கும் பண்பைச் சிறப்பாய் எடுத்துக் காட்டுகின்றது. குழந்தையையே 'சாய்ந்தாடம்மா' என்பது எவ்வளவு இனிமை! அதை உச்சரித்துப் பார்த்தால் தான் எளிமையும் இனிமையும் புரியும். குழந்தைகளின் மனம் வென்ற இப் பாடல்கள் நம் மனதையும் வெல்லாமலா போகும்? ஒரு முறை ரசித்துப் படித்துப் பாருங்கள்! பாடத் தெரியாத உங்களுக்கும் கூட ராகம் தானாகவே ஓடி வரும்! ஊஞ்சலும் ஒட்டி உறவாடும் உணர்வுகளல்லவா?


சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
தாமரைப் பூவே சாய்ந்தாடு
குத்து விளக்கே சாய்நதாடு
கோவில் புறாவே சாய்நதாடு

சோலைக் குயிலே சாய்ந்தாடு
தோகை மயிலே சாய்ந்தாடு
கண்ணே மணியே சாய்ந்தாடு'
கற்பகத்தருவே சாய்ந்தாடு