செவ்வாய், 13 செப்டம்பர், 2011

என்ன அழச்சிகிட்டு




நம் மக்களின் வாழ்க்கை ஒரு நீண்ட பயணம் கொண்டது. ஒரு காலத்தில் இந்தியாவில் தென்னகத்தில்காணப்பட்ட வறுமை! நமது வாழ்வியலையே முற்றிலும் மாற்றியமைத்தது. உழைப்பிற்காக நாம் அழைக்கப்பட்டதென்னவோ உண்மைதான். ஆனால், வாழ்வதற்காக நாம் வந்த பயணம்1 இன்றும் வரலாற்றுக் கறைகளாக! துயர்படிந்த அத்தியாயங்களாக! இருப்பது நம்மில் இளவட்டங்களுக்கு, ஏன் பல பெரியவர்களுக்கே தெரியாது. உலகம் போற்றும் திரைப்படமாக விளங்கிய 'டைட்டாணிக்' கப்பல் படம் நமக்கு ஒரு காவியம். அதுவும் உண்மைக் காவியம்!

ஆனால், நம் உறவுகளுக்கு ஒரு 'ஆதிலெட்சுமி' கப்பல் பயணம் யாருக்குத் தெரியும்! ஆயிரக் கணக்கான உயிர்களை கடலிலேயே காவு கொண்ட எமன! உழைப்பிற்காக மரணமான சரித்திரம்! எத்தனை உயிர்கள் இந்த மலையகத்தை நோக்கிப் பயணிக்கும் போதே நடுக் காடுகளில் மரணித்த அவலம். இந் அவலங்களையும் நாட்டார் பாடல்கள் சுவையாகத் தந்திருக்கின்றன.

இந்த வகையில் உறவுகளின் பிரிவுகளை, உண்மை அன்பின் வெளிப்பாடுகளை, இல்லற உணர்வின் அன்பை எப்படி இந்தப் பாடலில் வெளிப்படுகின்றது என்று பாருங்கள்!

பொழக்கத்தான் நாம வந்து
இன்னும் பூமி போய் சேரலியே
கடன கட்ட வந்து – நாம
கண்டி போய் சேரலியே
பாதி வழியில ஏன் ராசாவே
பரலோகம் போயிட்டீங்க
இனியும் நாம் போயி
இங்க என்ன செய்வேனோ
என்ன அழச்சிகிட்டு
ஏ ராசாவே போயிடுங்க


ஆம் பிரிவுத் துயரில் இந்தப் பேதையும் அவனது இறுதிப் பயணத்தில் இணைந்து கொள்ள விரும்புவதும் ஒரு உண்மை அன்பின் வெளிப்பாடல்லவா?











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக