செவ்வாய், 13 செப்டம்பர், 2011

இயற்கையே வாழ்க்கை!


எழுதா இலக்கியம் என்பதாலோ இந் நாட்டார் பாடல்கள் ஒரு சமூக வழக்கைக் கொண்டிருந்தாலும் அவை பிரதேசத்திற்குப் பிரதேசம் மாறுபட்டுச் செல்வதைக் காண்க் கூடியதாக உள்ளது. பாடல் வரிகளிலும் கூட அவை மாறி மாறிச் செல்லும் பாங்கும் இருந்தாலும் அது எடுத்தாளப்பட்டுள்ள விதம் மிகவும் சிறப்பானதாய் இருக்கின்றது.
தாலாட்டுப் பாடல்கள் மலையகப் பிரதேசங்களில் முன்னுரிமை பெறுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை! ஏன் தெரியுமா? கணவன், மனைவி இருவருமே தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிகின்றவர்கள்! தேயிலைத் தோட்டங்கள் தான் அவர்களுக்கு வீடு! முருங்கை மரம் தான் நிழல்! வேப்ப மரம் தான் தொட்டில்! பசும் புற்றரைகள் தான் பஞ்சு மெத்தைகள்! கருங்கற் திட்டுகள் தான் குசன் நாற்காலிகள்!அருவிகளும் ஓடைகளும் தான் 'டிஸ்டிலரிஸ் வாட்டர்'.இயற்கையே வாழ்க்கை! இது தானே நம் மக்களின் வாழ்க்கைக் கூடாரம்?
இந்த மக்கள் தம் தொழிலைச் சிறப்பாகச் செய்தாலே உணவு? எனவே தொழிலைச் செய்ய தன் பிளளைகளை உறங்கவைத்துத் தானே ஆகவேண்டும்? இதில் கடல் கடந்து ராமேஸ்வரம் முதரம் மன்னார் வரையும் அத்துடன் ஒவ்வொரு காட்டையும் தேயிலைத் தோட்டங்களாக மாற்ற அவர்கள் ஆற்றிய பணிகள்? அப்பப்பா? மெச்சாதோர் மெச்சாமலே இருக்கட்டும். நாம் நம்மைப் பாராட்டிக் கொள்ளத்தானே வேண்டு;ம்!
இந்த வேலைகளுக்கு மத்தியில் கால் வயிற்றுக் கஞ்சியை பெற்றுக் கொள்ள உழைக்கும் போது பிள்ளைகள் அழுதால் வேலையைச் செய்யத்தான் முடியுமா?
இதோ தன் வேலையையும் செய்ய அதே நேரம் தன் பிள்ளையும் அயர்ந்து தூங்க தாலாட்டுப்பாடல் வருகிறது!அது இதமாய் மனங்களின் மனதை மட்டுமல்ல அந்தக் குழந்தையின் மனதையும் வருடி சுகமாய்த் துயில வைக்கிறது. அந்த மலைக்காற்றின் இதமான காற்றும் வேப்ப மரத்தின் வாசமும் குழந்தையின் நாசிக்கும் தோளுக்கும் இயற்கை தந்த அரும் பெரும் கொடைகளல்லவா?
பாடலைப் பாருங்கள்!

ஆராரோ ஆரிரரோ ஆர் அடிச்சி நீ அழுக
மாமா அடிச்சாரோ மல்லிப்பூ கையாலே
அத்தை அடிச்சாலோ அரிய பூ கையாலே
பாட்டி அடிச்சாரோ பாலூட்டுங் கையாலே
ஆராரோ ஆர் அடிச்சி நீ அழுக!

கண்ணுக்கோ கண் எழுதி கடகனுமே மெய' எழுதி
மெய் எழுத மெய் எழுத மயங்கிவரும் நித்திரைகள்
நித்திரை போவாங்கோ கத்தரிப்பூத் தொட்டியிலே
தொட்டிக்குக் கீழ் துணையிருக்கும் மாரியம்மா
மாரி துணையம்மா மகமாயி காவல் அம்மா காலி
துணையிருப்பா காமாச்சி காவலிருப்பா – கண்ணுக்கோ
கண்ணாடி காலுக்கொரு ஈரண்டா ஈரண்டா
விலை மதிக்க வீரனோ உங்க மாமா
ஆர்ஆராரோ ஆரிரிவரோ ஆர் அடிச்சி நீ ஆழக!

மஞ்சள் கிழங்கு வெட்டி மாமே மத்தியானமே
வண்டி கட்டி மஞ்சள் மனக்குதம்மா உங்க
மாமா மகராசா போரா வண்டி இஞ்சி கிழங்கு
வெட்டி உங்க மாமா இளையராஜா போர வண்டி
இஞ்சி மனக்குதம்மா உங்க மாமா இளையராஜா போர வண்டி
ஆர்ஆராரோ ஆர் அடிச்சி நீ அழுக!

அன்னக்கிளி போகுதம்மா உனக்குச் சித்த தண்ணி
கொண்டுவர கொஞ்சுங்கிளி போகுதம்மா!
உனக்கு கோபங்கிளி கொண்டு வர மானத்து
மீனோ நீ மேகத்துப் பண்ணீரோ பாலவத்த
தீக்க வந்த தங்க இளநீரோ?
ஆர்ஆராரோ ஆர் அடிச்சி நீ அழுக
மஞ்சள் கிழங்கு வெட்டி மாமா மத்தியானமோ
வாரானம்மா அல்லி மகளே அருங்கிளியே
பெத்த கண்ணே புள்ளி மகளே நீ புண்ணியரே
பெத்தக் கண்ணே அல்லி பூ வள்ளி ரதுமோ
மகளே மேலவருங்கோ தங்க ரதம் ஏஞ் சொத்து
தவமாய்ப் பெத்து வந்த வந்தவனோ
ஆர் ஆராரோ ஆர் அடிச்சி நீ அழுக

கண்ணுமணி பொண்ணுமனி கந்தரோடு வேலுமணி
வேலுமணி வேணுமுனு வேண்டித் தவஞ் செய்தேன்.
அம்மா வள்ளினா வள்ளி மணல் மேல படரும்
வள்ளிக் கொடிப் படர்ந்த வள்ளியோடு கூட பொறந்தவனோ
ஆர் ஆராஆரோ ஆர் அடிச்சி நீ அழுக?
தாலாட்டு இடம் பொருள் பார்த்துச் சுவைக்காக எழுதப்பட்ட இலக்கியமல்ல! அது நம் வாழ்க்கையில் மக்களுடன் ஒட்டி உறவாடிய ஒரு அழகான இசைப் பேரின்பம்! செலவில்லாமல் அது ஒரு சுகப் பயணம்! காலத்தின் நம்பிக்கையான அடித்தளம் இந்த நாட்டுப்பாடல்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக