ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

நல்லதோர் ஆரம்பம்!




தமிழர் திருநாளில் எத்தனையோ வாழ்த்துக்களைப் பார்க்கின்றோம்! அத்தனையும் உண்மையாகிறதோ பொய்க்கிறதோ தெரியவில்லை. வாழ்த்துக்கள் மட்டும் மனமார பகிர்ந்துகொள்ளப்படுகின்றது. ஆனால், மனித மனங்களில் தாமாக முயன்றால் மட்டுமே வாழ்த்துக்களும் வெல்லும். இந்த ஆண்டும் நமக்கெல்லாம் நாம் எதிர்பார்க்கும் அனைத்து விடங்களும் முழுமையாக வெற்றியடையாவிட்டாலும் தோல்வி அடையாமல் இருக்க வேண்டும். அதற்கு எடுக்கின்ற காரியங்கள் அனைத்தும் சரியானதாகவும் நேர்மையானதாகவும் இருக்க வேண்டும்!

புத்தாண்டு நல்லதோர் ஆரம்பமாக இருக்கட்டும்!
வாழ்த்துக்களுடன்,
பெ.லோகேஸ்வரன்.

திங்கள், 26 மார்ச், 2012

புதுயுகம் படைப்போம் வாரீர் தோழா!





மஸ்கெலியா பெ.லோகேஸ்வரன்

.........................................................

புதுயுகம் படைப்போம் வாரீர் தோழா
பூமியில் தனித்துவம் காப்போம் தோழா
சின்னதோர் தீவினிலே வண்ணக் கனவுகளுடன்
சிறப்பாய் உழைத்திடுவோம் தோழா!

வல்லரசுக் காலை உதறிடுவோம் தோழா
வல்லமையுடன் எழுவோம் தோழா
எள்ளி நகையாடும் குறுஞ் செய்தி கேட்டு
குரலெதிராய் மலர்வோம் தோழா!

அழிந்திட்ட அத்தனையையும் அன்புடனே
அழகாய் அமைத்திடுவோம் தோழா
இழந்ததையும் நடந்ததையும் சொல்லி
இனிவரும் காலத்தையும் இழக்கலாமோ தோழா!

ஓரணியாய் நின்று நம் உள்ளத்தால்
மனித மனங்களை வெல்வோம் தோழா
அன்பையும் ஆயுதமாய் எடுத்தால்
அனைவரும் சமமாய் வாழ முடியும் தோழா!

போட்டி பொறாமை புரட்சியென்று இங்கு
காலத்தையே நாம் வரட்சியாக்கலாமா தோழா?
நம் வருங்காலச் சந்ததிக்கும் மனுகுலத்திற்கும்
நம் பூமியை வெப்பக் காடாக்கலாமோ தோழா!

எழுக என் தோழா எங்கும் நீயும்
ஏற்றம் பெறலாம் தோழா! – நாளும்
சொந்தங்கள் சுகம் பெறவே
சோர்வின்றி எழுக என் தோழா!

இன்றைய உலகம் நமதெனவே எழுக தோழா
இன்முகம் காணலாம் வா தோழா
உலகச் சவால்களை வெல்வோம் தோழா
உன்னதமாய் நாம் வாழ்வோம் தோழா!

வியாழன், 1 டிசம்பர், 2011

எதிர்காலம்,வாழ்க்கை





தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளாகிய நாம் நமது வாழ்க்கையின் வெற்றியை எப்படி பார்க்கின்றோம்? நாம் நமது வாழ்க்கையில் ஏதாவது மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.

இந்த மாற்றம் தேயிலைத் தோட்டங்களிலிருந்து நமது உழைப்பு மாற வேண்டும் என்ற எண்ணமே பெரும்பாலான இளைஞ்களிடம் இருக்கின்றது. ஆனால், இதற்காக நமது வாழ்வில் அதுவும் இளம்பராயத்தில் செய்யவேண்டிய,சாதிக்க வேண்டிய,முயற்சிக்க வேண்டிய எண்ணங்களை நாம் எப்படி நாம் நமது வாழ்க்கைப் பயணத்தில் இணைத்துக் கொள்கின்றோம் என்பதே இன்றைய இளைஞர்களிடம் முன் வைக்கப்படும் ஒரு வினா!

எதிர்காலம்,வாழ்க்கை இது எல்லாம் நமது அன்றாட நிகழ்வுகளிலிருந்து விலகியிருக்கின்ற ஒன்றா? உண்மையில் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் மிக முக்கியமானது. மலையக இளைஙர், யுவதிகள் தமது உழைப்பை எந்தக் கோணத்திலும் சரியாகச் செய்ய ஆர்வம் காட்டுதல் வேண்டும். அது கல்வியாக இருந்தாலும் சரி,கணனியாக இருந்தாலும் சரி,வேலையாக இருந்தாலும் சரி அது நிறைவானதாய் இருக்க வேண்டும்.

நான் இப்டித் தான் வரவேண்டும் என்ற எண்ணத்தை வலுவாகக் கட்டியெழுப்பிக் கொள்ளல் வேண்டும் .அதற்காக ஒவ்வொரு நொடியும் சிந்தித்துச் செயற்படல் வேண்டும். நமது கவனம் முழுவதும் தன்னம்பிக்கையுடன் கூடியதாய் அமைதல் வேண்டும். அதற்கு முதலில் ஆரோக்கியமும் தெளிவும் அவசியம். உழைப்பையும் முயற்சியையும் கைவிடாமல் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்பது நம்மிடையே விதைக்கப்படும் அழகான செய்தி

எது அழகு?




எது அழகு? நான் பேசுகிறேன்.... நான் பாடுகின்றேன்.... நான் ஆடுகின்றேன்..... இப்படி எதை எதையோ செய்கின்றேன்..... எல்லாவற்றையும் அழகு என்கின்றார்கள்...... இப்படியிருக்க, என் அழகு வெறுமனே இந்த உடலின் மீது போர்த்தப்பட்டிருக்கும் தோலினால் தான் அழகாக்கப்படுகின்றதா?

ஆண்கள் பெண்களையும் பெண்கள் ஆண்களையும் எதனை வைத்து அழகாகப் பார்க்கின்றார்கள்? ஒரு காலத்தில் மர்லின் மன்றோவையும் பிறகு ஐஸ்வரியா ராயையும் அழகு என்று சொன்ன உலகம் இந்த நமது தமிழ் சினிமாவில் வரும் சாவித்திரி,ஸ்ரீதேவி, மாதவி,ரேவதி,மீனா,நக்மா.குஸ்பு,ஸ்நேகா,தமன்னா இப்படி ஐந்து வருடத்திற்கொருவரை அழகு என்று நம்பர் ஒன் இடத்திற்கு மாற்றவில்லையா?

அழகை அழகு நிலையத்தில் தேடினால் அது ஆபத்துதான்... அதனால் தான் என்றோ அழகு ஆபத்தானது என்றார்கள்..... நம்மில் பலர் உடல் அழகைப் பற்றிச் சிந்திப்பவர்கள் உள அழகைப் பற்றிச் சிந்திப்பதில்லை....... ஒரு உதாரணக் கதை ஒன்று பாருங்கள்! உயரதிகாரிகள் பலர் ..... அவர்கள் எப்போதும் அந்த உத்தியோகத்தரைப் பார்த்து நீங்கள் இங்கிருக்க வேண்டியவர் இல்லை... உங்களது திறமைக்கு என்று... சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக... அவரை உயர்த்திப் பேசியே அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். ஒரு நாள் நல்ல அதிகாரி என்று நினைத்து அவரிடம் தனது மேன்மை தொடர்பாக செய்தியைச் சொன்னபோது அந்த அதிகாரிக்கு வந்ததே கோபம்.... ஆரத்தழுவியர் இப்போது பேசுவது கூட இல்லை...

இப்படியிருக்க, வெறுமனே அழிந்து போகும் உடலாகிய பிணத்திற்கு அழகு செய்து பார்ப்பவர்களுக்கு அசிங்கமாகுவதைவிட உள்ளமாகிய அழகைக் கட்டி எழுப்புவது மேன்மையானது. மற்றவர்களைப் புகழாவிட்டாலும் அவர்களது வாய்ப்புகளைத் தட்டிக் கழிக்காமல் இருப்பதே நன்மையானது....

இடுப்பொடிஞ்சு நிக்கயிலே






தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களது பாடல்கள் உழைப்பையும் வேதனையையும் காலநிலையையும் அப்படியே படம்பிடித்துக் காட்டுவனவாய் அமைகின்றன. இந்தப் பாடலில் ஒரு உழைப்பாளியின் சோகம் மறைந்திருக்கின்றதது என்றாலும் உண்மையில் அங்கு அவனின் வேதனையும் ஆழமாய் இருக்கிறது. பாடல்கள் கற்பனைக்கு இரசனைக்குமாக வந்தவைகள் அல்ல. அவை யதார்த்தத்தின் மறைக்கமுடியாத வெளிப்பாடுகள். இந்த தொழிற் பாடலைப்பாருங்கள்.

வாடை அடிக்குதடி வடகாத்து வீசுதடி
சென்னல் அடிக்குதடி-நாம் சேந்து வந்த கப்பலிலே

எண்ணிக் குழிவெட்டி இடுப்பொடிஞ்சு நிக்கயிலே
வெட்டு வெட்டு எங்கிறாரே பொட்டுவச்ச கங்காணி

ஆத்தோரம் கொந்தராப்பு அது நெடுக வல்லாரை
வல்லாரை வெட்டியல்லோ – என் வல்லமை கொறஞ்ச தய்யா

ஊரான ஓர் இழந்தேன் ஒத்தப்பனை தோப்பிழந்தேன்
பாரான கண்டியிலே பெத்த தாயும் வீடிழந்தேன்.

பழனிசம்பா சோறிருக்க






கண்டிச் சீமை! சொந்த ஊரில் வறுமை என்பதனால் இங்கு வந்து எதை எதை இழந்தோம்? எல்லாவற்றையும் இழந்தோமே! இருப்பதைவிட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டதால் நாம் இழந்தவைகள் எத்தனை? எத்தனை?

இழந்தவைகளையெல்லாம் சொல்லி, ஏண்டி நீயும் இங்கே வந்தே? என வினா தொடுத்து தன் சோகங்களை அள்ளித் தெளிக்கும் வார்த்தைக் கவிகளின் சிறப்புகள்.....

எதையெல்லாமோ நாம் இழந்தோம்.. கடைசியில்.. பெத்த தாயையுமல்லவா நாம் இழந்தோம்? இதைவிட இன்னும் இழப்பதற்கு என்ன இருக்கின்றது? கண்டிச் சீமைக்கு வந்த பின் நம் நிலைமை தான் என்ன? இந்த பாடல் அழகாக தருகிறது. சுவைத்துப் பாருங்கள்.....

கண்டிக்கு வந்தமினு
கனத்த நகை போட்டமினு
மஞ்ச துளிச்சமினு
மனுச மற்க தெரியலியோ

பாதையிலே வீடிருக்க
பழனிசம்பா சோறிருக்க
எருமே தயிரிருக்க
ஏண்டி வந்தே கண்டிச் சீமை

ஊரான ஊரிழந்தேன்
ஒத்தபனை தோப்பிழந்தேன்
பேரான கண்டியிலே
பெத்த தாயே நாமறந்தேன்

வெள்ளி, 18 நவம்பர், 2011

பேரான கண்டியிலே


கண்டிச் சீமை! சொந்த ஊரில் வறுமை என்பதனால் இங்கு வந்து எதை எதை இழந்தோம்? எல்லாவற்றையும் இழந்தோமே! இருப்பதைவிட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டதால் நாம் இழந்தவைகள் எத்தனை? எத்தனை?

இழந்தவைகளையெல்லாம் சொல்லி, ஏண்டி நீயும் இங்கே வந்தே? என வினா தொடுத்து தன் சோகங்களை அள்ளித் தெளிக்கும் வார்த்தைக் கவிகளின் சிறப்புகள்.....

எதையெல்லாமோ நாம் இழந்தோம்.. கடைசியில்.. பெத்த தாயையுமல்லவா நாம் இழந்தோம்? இதைவிட இன்னும் இழப்பதற்கு என்ன இருக்கின்றது? கண்டிச் சீமைக்கு வந்த பின் நம் நிலைமை தான் என்ன? இந்த பாடல் அழகாக தருகிறது. சுவைத்துப் பாருங்கள்.....

கண்டிக்கு வந்தமினு
கனத்த நகை போட்டமினு
மஞ்ச துளிச்சமினு
மனுச மற்க தெரியலியோ

பாதையிலே வீடிருக்க
பழனிசம்பா சோறிருக்க
எருமே தயிரிருக்க
ஏண்டி வந்தே கண்டிச் சீமை

ஊரான ஊரிழந்தேன்
ஒத்தபனை தோப்பிழந்தேன்
பேரான கண்டியிலே
பெத்த தாயே நாமறந்தேன்